Monday, October 17, 2011

வியாசர்பாடியில் பர்மா நினைவுகள்
வியாசர்பாடியின், மகாகவி பாரதியார் நகர், பி.வி.காலணி சென்னையின் மற்ற பகுதிகள் போல் இல்லாமல், கலாச்சாரம், மொழி, உணவு, உடை, என எண்ணற்ற வித்தியாசங்கள் மற்றும் மாறுபட்ட மனிதர்களை கொண்டுள்ளது. விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்ற நிலை இப்பகுதியில் இல்லை மாறாக கால்பாந்தாட்டத்திற்கு முக்கித்துவம் கொடுக்கின்றனர். பேசும் போது சியா(வாத்தியார்), அசே(தரம் வாய்ந்த), அட்டூ(போலியான), பட்டா(டாலர்), தச்சி(ஊர் தலைவர்) என்று தமிழில் கலந்து பேசுசின்றனர் சிலர். உணவு விடுத்திக்கு சென்றால் அத்தோ, கவ்ஸ்வோ, மொய்ங்கா, மற்றும் பேபியா என்ன! புரியவில்லையா? இவை எல்லாம் பர்மிய உணவுவகைகளும் தான். இப்பகுதியில் பர்மாவில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

பர்மாவில் 1962களில் ஏற்பட்ட இராணுவ ஆட்சியின் காரணமாக, அங்கு வாழ்ந்த தமிழர்களை, பர்மாவை விட்டு வெளியேறும் படி அந்த அரசு வலியுறுத்தியது. இதுபற்றி பர்மாவிலிருந்து இடம் பெயர்ந்த தமிழரான கணேஷன் என்பவர் கூறும் போது" என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். ஆனால் நான் பிறந்தது பர்மாவில் தான். எங்கள் குடும்பம் விவசாயம் செய்து வந்தது பர்மாவில். விவசாயத்தில் தன்னுடைய கடுமையான உழைப்பால் பர்மாவில் கொடுகட்டி பறந்தனர் தமிழர்கள். விவசாயம் மட்டுமல்லாமல் வியாபாரத்திலும் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த 63களில் போது மாலை ஆறு மணி நூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அடுத்தடுத்து பணத்தை குப்பைகளில் வீசி, எரித்தனர். தமிழர் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் வியாபாரம் பாதிப்படைந்தது. தனி வரி விதித்தனர். சொத்துக்கள் பரிமுதல் செய்தனர். இவற்றை எதிர்த்து பர்மாவின் தமிழ் பத்திரிக்கைகளான ரசிக ரஞ்சனி, தொண்டன் தொடர்ந்து எழுதி போராடினர். கப்பலை விடுங்கள், கண்ணீரை துடையுங்கள் என்ற முழக்கமிட்டனர் பர்மிய தமிழர்கள். இதன் விளைவாக எஸ். எஸ். முகமதி, முஷபாரி, இஸ்லாமியா ஆகிய மூன்று கப்பல் மூலம் தமிழ்நாடு திரும்னோம்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வியாசர்பாடி, கும்மிடிப்பூண்டி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அகதிகளாக குடியேற்றியது இந்திய அரசாங்கம். தஞ்சாவூரில் பர்மா கலாணியை உருவாக்கினோம். என்ன வேலை செய்யலாம்? என்று குழம்பியவர்களாக இருந்தோம். ஓட்டுனர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு அரசாங்கம் அன்றாட செலவுக்காக படி கொடுத்தா£ர்கள். சிலர் வேலை கிடைக்காமல் பல பிரச்சினைகளை படிபடியாக சந்திக்க நேர்ந்தது, எங்களுடைய சந்ததியில் சிலர் தீய வழியை தேர்ந்தெடுத்தனர். இதனால் சமுதாயத்தில் வடசென்னை என்றாலே கொலை, கொள்ளை, கடத்தல் என மாறியது என்றார். மேலும் பர்மாவிர்க்கும், தமிழ் நாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்றால் கலப்படம் என்பதை தமிழ்நாட்டில் தான் முதலில் பார்த்தோம். அரிசியில் கல் இருந்தது. அங்கு பச்சரிசி உணவுதான் கிடைக்கும். வீடுகள் பர்மாவில் பெரும்பாலும் தேக்கு மரக்கட்டைகளால் தான் கட்டப்பட்டிருக்கும். தேனீர் கூட பச்சை தேயிலையை தான் உபயோகிப்பர். மனிதர்களிடம் மரியாதை அதிகம் இருக்கும், பேச்சில் தன்மையிருக்கும். பர்மா சேர்ந்தவன் என்பதற்கு சட்டையின் மேல் லூங்கியை கட்டியிருப்பது முக்கியமான அடையாளம் அதோடு தோளின் குறுக்காக ஒரு ஜோல்னா பையையும் வைத்திருப்பர். பர்மாவில் தமிழ்நாட்டிலிருந்து சென்றால் தச்சி(ஊர்தலைவர்) யிடம் அனுமதி வாங்கி தான் தங்கமுடியும். தமிழ்நாட்டை போல் சுதந்திரமாக இருக்க முடியாது. மற்ற நாடுகளில் அடிமையாக இல்லாமல், தமிழகத்திற்கு வந்து வாழ்வது கஸ்டமாக இருந்தாலும் பிரிந்த தன் தாயிடம் மறுபடியும் சேர்ந்து விட்டோம் என்று நிம்மதியாக மனதிற்கு கிடைத்துள்ளது என்றார். இவ்வாறு பர்மாவை விட்டு வந்தாலும், பர்மாவின் வாழ்கை எங்கள் மனதில் எந்தளவுக்கு வேருன்றி இருப்பதற்கு மகாகவி பாரதியார் நகரில் உள்ள பீலிக்கான் முனிஸ்வரர் ஆலயம், (பீலிக்கான் பர்மாவில் உள்ள நகரம் ஆகும்). பி.வி.காலணியின் மாலை நேர உணவுவிடுதிகள் இவைகளே முக்கிய சான்றுகள். இங்கு விற்கும் பொருள்களில் கலப்படமின்மை ஆகியவையே சான்றுகள் ஆகும். இவையே பர்மாவின் நினைவாக நாங்கள் ஏற்படுத்திக் கொண்டவை. வளர்த்த அன்னையை பிரிந்து, பெற்ற அன்னையிடம் வாழ்ந்தாலும், பர்மாவில் வாழாது போனது இழப்பு தான் என்று வருத்ததுடன் தெரிவித்தார்".

சாரல் நகரமும், அதன் பழமைகளும்
இமயமலையில் உருவாகி, கரைபுரண்டு ஓடும் கங்கை நதியின் கரையில் அமைந்த புனிதநகரம் தான் காசி. இந்த காசி நகரம் தென்னிந்தியர்களை பொறுத்தவரை செல்வந்தர்களால் மட்டுமே சென்று, வரும் தூரத்தில் அமைந்திருந்தது. ஏழை மக்களும் இந்த ஆன்மிக பயன் அடைய, இயற்கையாகவே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சிற்றரின் கரையில் அமைந்திருக்கும் நகரம் தான் தென்காசி. பண்டைய காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது.
“பரக்கிரம பாண்டியன்” என்ற பாண்டிய மன்னன் வடக்கே காசி சென்று திரும்பினான். அவனுடைய கனவில் சிவபெருமான் தோன்றினார். இதன் விளைவாக இங்கு 1440 ஆம் ஆண்டு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கட்ட தொடங்கப்பட்டு 1505 ஆம் ஆண்டு கட்டி முடி’கப்பட்டது, வானளாவிய கோபுரமும் எழுப்பப்பட்டது . இக்கோவிக்கு வந்து சிவனை தரிசனம் செய்தால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் விளைவாகவே இவ்வூரின் பெயர் தென்காசி ஆனது.
மேற்கு தொடர்ச்சி மலையின் மும்மலைகளான “திரிகூட மலைகள்” சங்கமிக்கும் இடத்தின் அடிவாரத்தில்,சுத்தமான தென்றல் காற்றோடு,மழை தூரல் சாரலாக பொழியும் நகரம் தான் தென்காசி நகரம். இம்மலையில் பழைய குற்றாலம்,குற்றாலம், சிற்றருவி, செண்பாகதேவி,தேன் அருவி, புலி அருவி என அருவிகள் பல உள்ளன. இம்மலையில் பல மூலிகைகள் உள்ளதால்,அருவிகள் மூலிகை வாசத்தோடே கொட்டுகிறது. இந்நகரம் பல பண்டைய பெருமைகளை உள்ளடக்கிய நகரம்.முன்னோர்கள் தன் சந்ததியோடு தொடர்ப்பு கொள்ளும் வகையில் சிற்பங்கள், கோவில்கள்,என சான்றுகள் நிறைய உள்ளன.
சிதம்பரேஸ்வரர் கோவில் சிற்பங்களும், ஓவியங்களும் மிகவும் பழமையானவை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் அழிக்கபட்டுவிட்டன. இங்கு இருக்கும் கிணற்றில் குகைகள் உள்ளன. குகைகள் தூர்ந்து போனாதால் இந்த வழிகள் எங்கு சென்று முடிகின்றன என்பதுகேள்வி எழப்புவதாகவே உள்ளன. இவ்வாறாக வராலாற்றில் என்ன நடந்தது என்பது கண்டறிய முடியாமலே விடுகதையாகவே மிஞ்சி நிற்கிறது சிதைந்த சில சான்றுகள்.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.இது 1824-ல் தீ விபத்தால் சிதைந்து போனது. கோபுரங்கள் 1826 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை இடிந்த நிலையிலேயே இருந்தது. பின் 1996 ஆம் ஆண்டு திரு.சிவந்தி ஆதித்தனார் அவர்களால் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று கம்பிரமாக காட்சியளிக்கிறது. இக்கோவில் எவ்வளவு பழமையோ, அதுபோல் இக்கோவின் பாதத்தில் அமைந்திருக்கும் கடைகளும் மிகவும் பழமையானவை, பாரம்பரியம் மிக்கவை. அவைகளுள் முக்கியமான கடையாக நூற்றாண்டுகளை கடந்து இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்து தன்னுடைய நற்பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது ஸ்ரீ கிருஷ்ணா விலாஸ் பெரிய லாலா கடை. இக்கடை இனிப்பு மற்றும் கார வகைகளை தரம் குறையாமல் இன்றும் கொடுத்து வருகிறது.
1904ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடையின் உரிமையாளர்கள் திரு.கிருஷ்ணசிங், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர்கள், உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ராஜஸ்தானில் இருந்து சொக்கம்பட்டி ஜமீனால் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய அழைத்து வரப்பட்டவர்கள். காலபோக்கில் பலகாரஙகள் செய்து விற்க துவங்கினர். அவர்கள் கோதுமையில் செய்த அல்வா இங்குள்ள மக்களுக்கு புதுமையாகவும், வித்தியாசமான இனிப்பு வகையாகவும், சுவையாகவும் இருந்த காரணத்தினால் இதுவே அவர்களின் நிரந்தரமான தொழிலாக மாறியது. இப்போது தென்காசி பெரிய லாலா கடையை திரு.கிருஷ்ணரான சிங் அவர்களின் மகன்களான திரு.சுப்பு சிங், திரு.மோகன் சிங் நடத்தி வருகின்றனர்.இப்பரம்பரையின் வாரிசான திரு.திலிப் சிங். கூறும் போது “அல்வா சுவையாக இருப்பதற்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் சிற்றரின் தண்ணீரே காரணம்” என்கிறார்.
சித்தர்கள் இன்றளவும் வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகின்றன. மகாலிங்க மலையும் மிகவும் பழமையானது. இங்கு உள்ள மூலிகைகளும், குகையும் வியப்பூட்டுவனாவாக உள்ளன. சித்திரசபையை கொண்டுள்ள நகரம். வீரத்திற்கும் பங்சமில்லை என்பதற்கு தென்காசியின் அருகில் உள்ள செங்கோட்டையில் பிறந்த வாஞ்சிநாதன் தன் உயிரை கொடுத்து விடுதலைக்கு வித்திட்டார் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு பல பழமைகளை கொண்டுள்ள இந்நகரம் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மற்றும் மலையாளிகள் ஒற்றுமையோடும், நட்புணர்வோடும் இருந்த சுற்றுலா தளமான தென்காசியில் தற்சமயம் சில மத பிரச்சனையை சந்தித்து வருவது வருந்ததக்க போக்ககாக உள்ளது
சென்னையின் துயரம் - சேரிகள்
சென்னையின் துயரமாக விளங்குவது கூவம் ஆறும், அந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளும் தான். சென்னை மாநகரத்தின் ஒட்டு மொத்த குப்பையும், தொழிற்சாலைகளின் கழிவுகளும், இந்த ஆற்றில் கலந்து கடலில் சேருகின்றது. சிலர் சாக்கடையில் வாழும் புழுவைப் போல் இந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் ஒன்றான சைதாபேட்டை, கூவம் ஆற்றின் கரையோரப்பகுதியில் அமைந்திருக்கும் திடீர் குப்பம், டோபிகான ஆகிய பகுதிகளுக்கு கடந்த வாரம் சென்றேன். மழை பெய்து இருந்ததால் அப்பகுதிக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவு நீர் தேங்கி நின்றது. அதையும் தாண்டி துர்நாற்றம் வேறு. ஒரு வழியாக சேரிக்குள் நுழைதேன். நெடுக்கமாக ஒரே ஒரு பாதையும், பாதைகள் முழுவதும் கழிவு நீரும், பாதையின் இருபுறங்களிலும் குடிசை வீடுகள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தது.
ஒற்றையடி பாதை வழியாகக் கடைசியில் அமைத்திருந்த வீடை அடைந்தேன். மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டினுள் சாக்கடை நீரும், பிளாஸ்டிக் பைகள், இதனுடன் கருப்பு நிற சகதியாக காணப்பட்டது.
வீட்டின் கூரைப்பகுதியும் வெள்ளத்தால் சேதம் அடைந்திருந்தது. அப்போது அங்கு வசிக்கும் வேலம்மாள் என்ற பெண்ணிடம் இந்த இடத்தை பற்றி விசாரித்தபோது . "இவர்களில் சிலர் இங்கு ஆற்றின் துணி துவைபவர்கள்.

இவர்கள் நிரந்தரமாக இங்கே வசித்து வருகிறார்கள். சிலர் அரசால் இடம் பெயர்த்தப்பட்டவர்கள். இதனால் இப்பகுதிக்கு திடீர் நகரம் என்ற பெயரும் உள்ளது. இப்பகுதிக்கும், கூவம் ஆற்றுக்கும் இடையில் கழிவு நீர், மற்றும் வெள்ளம் புகாமல் இருக்க தடுப்புச் சுவர் ஒன்றை அரசு கட்டிகொடுத்துள்ளது. அந்த பகுதியில் முன்பகுதி ரயில்வே இடம் என்பதால், அந்த இடத்தில் சுவர் கட்டாமல் விடப்பட்டுள்ளது. தடுப்பு சுவரையும் மீறி கழிவு நீர் உட்புக இப்பகுதி தான் காரணமாக அமைகிறது" என்று அவர் கூறினார். இவர் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வருகிறார். தினமும் நுறு ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆண்கள் பலர் இங்கு மது அருந்தி தன்னுடைய வருமானத்தை அழிகின்றனர். பெரும்பாலான வீடுகளில் அரசுதொலைக்காட்சி பெட்டி இருந்தது.
இவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதியில் சிக்கல் உள்ளது. கழிப்பறைகள் எந்த வீட்டிலும் இல்லை. எல்லாவற்றையும் விட சாக்கடையான கூவம் எந்த நேரத்திலும் உட்புகும், நோய் பரவும் அபாயம் வேறு. இப்படி பல பிரச்சனை இருந்தாலும் இதை பற்றி இம்மக்களுக்கும் எந்த விழிப்புணர்வும் இல்லை. அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திடம் மக்கள் எந்த கேள்வியும் கேட்டு விடாமல் இருக்க, மக்களின் மூளை நன்கு மலுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தொலைகாட்சி திட்டம் சென்று சேர்ந்த அளவுக்கு, மற்ற அடிப்படை வசதிகள் அப்பகுதிகளில் இல்லாமல் இருப்பது உணர்த்துகிறது.
குழந்தைகள் கல்வி கற்க செல்கின்றனர் என்பது மட்டுமே மகிழ்ச்சியான ஒன்று. இக்குழந்தைகளின் கல்வியாவது இந்நிலையை மற்றுமா? சென்னை சிங்கார சென்னையாக மாறுமா ?

சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியின்
உற்சாகத்தை தொடங்கி வைப்பதே நாங்க தான்


சேப்பாக்கம் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கிரிக்கெட் மைதானம் தான். அதுவும் இந்தியாவின் அணி, சென்னையின் சூப்பர் கிங்ஸ் அணி ஆடினால், மைதானத்தை சுற்றி அமைந்துள்ள பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதிச் சாலை, மற்றும் வாலாஜா சாலை முழுவதும் திருவிழா போல் காட்சியளிக்கும். ஆட்டம் மாலை வேலையில் தொடங்குகிறது என்றால் காலை முதல் மைதானத்தை சுற்றி கிரிக்கெட் ஆர்வலர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். அப்போது ரசிகர்கள் மைதானத்திற்குள் சென்று தங்கள் மகிழ்ச்சியை, ஆரவாரத்தை வெளிப்படுத்தவும், தங்கள் அணிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள், அணியினர் அணிந்திருக்கும் டி.சர்ட், தொப்பி, கொடி, ஒலி எழப்பி ஆகியவற்றை எடுத்து செல்கின்றனர். இவை மைதானத்தின் வெளியே விற்கப்படுகின்றன. இந்த பொருட்களை எல்லாம் பாரிமுனையில் இருந்து வாங்கி வருகின்றனர். இந்த விற்பனையாளர்கள் முகத்தில், அணியின் அடையாளத்தை வண்ணம் தீட்டி கொண்டு, ஒரு கையில் அணியின் கொடி, டி-சர்ட், மற்றொரு கையில் ரிப்பன்கள், தலையில் தொப்பி அணைந்து விற்பனை செய்து வருகின்றனர். பெண்களும், குழந்தைகளும் கூட இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருகின்றன. சிலர் குடும்பத்தோடு விற்பனை மேற்கொள்கின்றனர்.8 வயதிலிருந்து 14 க்குள் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒலி எழுப்பான், ரிப்பன், கொடி ஆகியவற்றையே விற்கின்றனர். ஆட்டம் ஆரம்பிப்பதற்கு 4 மணி நேரம் முன்னதாக வந்து விற்பனையில் ஈடுபடும் இவர்கள் எல்லாம் நாட்களிலும் மைதானத்திற்கு வெளியே விற்பனை செய்வதில்லை. இந்திய அணிகள் விளையாடினால் மட்டுமே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பாடி, பட்டாபிராம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றனர். தற்காலிகமாக நடக்கும் இவ்வியாபாரம் பற்றி வியாபரத்திலிருந்த வாசு என்றவரிடம் கேட்ட போது” கடந்த மூன்று வருடங்களாக டி-சர்ட், கொடி விற்பனை செய்து வருகிறேன். டி-சர்ட் 100 ரூபாய்க்கும், கொடி 20 ரூபாய்க்கும் விற்கிறது. மற்ற நேரங்களில் குடை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறேன். என்னுடைய மனைவியும் தற்போது என்னோடு விற்பனையில் உள்ளார். நாங்கள் இருவரும் படிக்காதவர்கள் என்று கூறினார். சிறிது தூரத்தில் குடும்பத்தோடு விற்பனை செய்து கொண்டும், சில குடும்பங்கள் உணவருந்திக் கொண்டும் இருந்தனர். அவர்களில் வெங்கடேஸ் என்பவர் ஆட்டோ டிரைவராக கே.கே.நகரில் உள்ளார். அவரும் இத்தொழிலில் குடும்பத்தோடு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் கூறும் போது இதுல ஒரு டி-சர்ட்க்கு 20 -30 ரூ லாபம் கிடைக்கும். இராண்டாயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிட்டு வந்து குடும்பத்தோட விற்பனை செய்துவிட்டு, மேட்ச் ஆரம்பிக்கும் போது ஸ்டேடியம் உள்ளார போயிட்டு ஜாலியா மேட்ச் பார்போம். இந்த தொழிலில ஒரு ஆறு வருடம் இருக்கேன்.என்றார்.

மேலும் விற்பனையில் ஈடுபட்டிருந்த முனுசாமி தன் மனைவி கைகுழந்தையோடு நின்றார். அவர் கூறும் போது எங்க குடும்கத்துல யாரும் படிக்கல. டி.வி பார்த்து மேட்ச் இருக்குனு தெரிஞ்சுகிட்டு இந்த பொருட்கள வாங்கிட்டு வருவோம். ஆட்ட நேரங்களில் வழக்கமாக ஐம்பது குடும்பங்கள் மேல் இத்தொழில் ஈடுபட்டிருப்போம். நாங்க பண்ணுற குடை ரிப்பேர் பண்ணுர வேலை விட லாபம் அதிகமாக இருக்கு. இந்த தொழில்னால எந்த அங்கீகாரம் இல்லனாலும் எனக்கும், என் குடும்பத்துத்துக்கும் சாப்பாட்டிற்கு கிடைக்குது. எந்தனை கோடி குடுத்து மேட்ச் நடத்தினாலும், எவ்வளவு ரூபா காசு கொடுத்து டிக்கெட் வாங்கினாலும் நாங்க தான் உற்சாகத்தை, ஆரவாரத்தை தொடங்கி வைக்கிறோம். என்றார்.
இந்த சிறு வியாபாரிகளின் தன்னம்பிக்கையும், தங்களால் தான் போட்டியின் உற்சாகம் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது என்ற சிந்தனையும், பிறரை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி கொள்ள செய்வது என நாம் அறியாத இவர்கள் வியப்புக்குரியவர்களே.
நுற்றாண்டுகளை கடந்த மாட்டு தொட்டி

சென்னையின் மக்களின் அன்றாட உணவிற்காகவும், சமையல் கூடங்கள், மற்றும் நட்சத்திர உணவுவிடுதிகளுக்கு தேவையான இறைச்சி தேவையை நிறைவு செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டது தான் வியாசர்பாடியின் மாட்டு தொட்டி. ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மாட்டு தொட்டியானது 108 ஆண்டுகள் பழமையானது. சென்னை மக்களின் இறைச்சி தேவையை பூர்த்தி செய்யும் இத்தொட்டியானது ஆங்கிலேயர்களால் 1903ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள இறைச்சி கூடங்களை தாங்கி நிற்கும் தூண்கள் ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டிடங்களில் உள்ள தூண்கள் போலவே உள்ளன. நூறு ஆண்டுகளை கடந்தும் உறுதியாக சேதமில்லாமல் உள்ளன என இறைச்சி வெட்டும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மாட்டு, ஆட்டு இறைச்சிக்கு என்று தனித்தனிக் கூடங்கள் உள்ள இத்தொட்டியில், இறைச்சி விற்பனையானது தினமும் காலையில் ஆறு மணி முதல் எட்டு மணி வரை நடைபெறும். ஞாயிறு அன்று மட்டும் காலை மூன்று மணிக்கே தொட்டி தொடங்கப் படுகின்றது. மாடுகள் மற்றும் ஆடுகளானது அருகிலுள்ள ஆந்திரா, பாண்டிச்சேரி, பல்லாவரம் ஆகிய பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. மறுநாள் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள் மற்றும் மாடுகள் முந்தைய நாளே தொட்டிகளில் உள்ள தொழுவங்களில் கட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எருமை மாட்டின் இறைச்சி வெளிர் மஞ்சள் நிறத்திலும், காளைமாட்டின் இறைச்சி வெண்மை நிறத்திலும் இருக்கும். பசுமாடுகள் இங்கு கொல்லப் படுவதில்லை. எழும்போடு சேர்த்து கிலோ எண்பது ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. மொத்த விற்பனை மட்டுமே இங்கு நடைபெறுகின்றது. இறைச்சி வெட்டும் தொழிலாளிக்கு நாளொன்றுக்கு தினக்கூலியாக நூற்றைம்பது ரூபாயும், மாட்டின் கொழுப்பும் கொடுக்கப்படுகிறது. இத்தொட்டியின் முன்னாள் தலைவரான டிஸ்கோர்ஸ் கூறும் போது சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு மாடுகளை பொருத்தவரை நூறு முதல் தொன்னூறு மாடுகள் வரை வருகின்றன. விழாநாட்களில் நூற்றைம்பது மாடுகள் வரை வெட்டப்படுகின்றன. இவ்வாறு இறைச்சிக்காக செல்லும் மாடுகள் கால்நடை மருத்துவரால் நன்கு பரிசோதிக்கப்பட்டு, பின் அரசால் வழங்கப்படும் முத்திரை சீட்டை வாங்கிய பின்னரே தொட்டிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இவ்வாறு இறைச்சியாக்குவதற்கு ஒரு மாட்டிற்கு பத்து ரூபாயும், ஆட்டிற்கு மூன்று ரூபாயும் அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகின்றது என்றார்.

தற்போது தொட்டியின் அருகில் தனியார் நிறுவனம் மாடுகளை வெட்டி இறைச்சி எடுத்து ஏற்றுமதியாக்க தொழிற்சாலை தொடங்கி உள்ளது. இதில் தற்போது ஐந்து மணி நேரத்திற்குள் மூன்று மாடுகள் மட்டுமே வெட்டப்படுகின்றன. ஆனால் அரசாங்க தொட்டியில் இருபது மாடுகளை, மூன்று தொழிலாளிகள் ஒரு மணி நேரத்திற்க்குள் இறைச்சியாக்கி விடுவர். தொழிற்சாலையில் வெட்டப்படும் இறைச்சியில் கழிவாக இருபது கிலோ வரை நீக்கப்படுகின்றது, பத்தாயிரம் விலையில் வாங்கப்படும் ஒரு மாடு நூறு கிலோவாக இருந்தால் இறைச்சியாக வெளியேறும் போது எண்பது கிலோவாக உள்ளது. இவ்வாறு இருபது கிலோ கழிவாக கழிக்கப்படும் போது இரண்டாயிரம் வரை நஷ்டமாகி விடும். ஆனால் ஒரு மாதம் வரை கெட்டுபோகாமல் இருக்கும் என்று கூறுகின்றனர். தொட்டியில் கத்தி மூலம் வெட்டுவதால் இறைச்சியானது இரண்டு நாட்கள் வரை தான் கெட்டு போகாமல் இருக்கும், கழிவாக இரண்டு கிலோ மட்டுமே ஒதுக்கப்படுகின்றது என்று தொட்டியின் வியாபரியான ஜாக்கப் தெரிவித்தார்.

இறைச்சிக்கு அடுத்தபடியாக தோல் நல்ல விலைக்கு வாங்கப்படுகின்றன. தோலின் எடையை பொறுத்து ஏலம் விடப்படும். கழிவாக, கொம்புகள், வால், மற்றும் எலும்புகள் கழிக்கப்பட்டாலும் இவைகளும் சில தொழிற்நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. எழும்பு விற்பனை செய்யும் பெரியசாமி, கழிக்கப்பட்ட எழும்புகள் பத்து நாட்கள் வரை வெயிலில் காய வைக்கப்பட்டு கிலோ ஐந்து ரூபாய்க்கு எங்களிடம் வாங்கி செல்கின்றன ஆம்பூர் மற்றும் ஆந்திராவில் இயங்கி வரும் சில நிறுவனங்கள், இவ்வாறு வாங்கி சென்ற எழும்பு மற்றும் கொம்புகளை கொண்டு வாசர், பொத்தான்கள், சீப்புகள் செய்ய பயன்படுத்துகின்றன. எழும்புகள் சக்கரை சுத்திகரிப்பிற்காகவும், வீட்டின் சுவர்களில் இராசாயன வர்ண பூச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்றார். இவ்வாறு மக்களின் உணவு தேவைக்காக அயராது இயங்கி வரும் அரசின் மாட்டு தொட்டியின் தொழலாளர்களான நாங்கள் படிக்காதவர்கள், பல வருடங்களாக இத்தொழிலிலே இருந்து விட்டோம். எங்களுக்கு இத்தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது ஆனால் சில பத்திரிக்கையாளர்களோ எங்களின் நிலைமை புரியாமல் எங்களால் சுகாதார கேடு ஏற்படுவதாக தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வருகின்றனர். கழிவுகளை வெளியேற்ற அரசாங்கம் எந்த நடவடிக்கையும் செய்தால் மழைக் காலங்களில் இறைச்சியாக்க நாங்கள் படும் கஷ்டங்களும், கழிவுகளின் மேல் நின்று கொண்டும், துர்நாற்றத்தை தாங்கி கொண்டும் நாங்கள் தொழில் செய்து வரும் இங்கு சரியான தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை. மேலும் இங்கு வேலை செய்யும் தொழிலார்கள் அங்கிகாரம் இன்றியே தொழில் செய்து வருகின்றோம், தொழில் செய்யும் போது கைகளை வெட்டி கொண்டால் கூட முதலுதவி வசதிகளோ, மருத்துவமனையோ இங்கில்லை. இத்தொழிலை நம்பி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் உள்ளன என்று மாட்டுத் தொட்டியின் செயலாளர் சம்பத் வருத்ததுடன் கூறினார்.